மறை நீர் (Virtual water)

மறை நீர் (Virtual water)

பாட்டிலில் அடைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட ஒரு லிட்டர் குடிநீரின் சராசரி விலை ரூ.20. தமிழகத்தில் சுத்திகரிக்கப்பட்ட அம்மா மலிவு விலை குடிநீரின் விலை ரூ.10. இது நமக்கு தெரியும். ஆனால், எத்தனைப் பேருக்கு மறை நீர் (Virtual water) விலை தெரியும்?

மறை நீர் என்பது ஒருவகை பொருளாதாரம். மொத்த உள்நாட்டு உற்பத்தியை (Gross domestic product) ஒரு நாட்டின் பணத்தைக் கொண்டு மதிப்பிடுவதுபோல ஒரு நாட்டின் நீர் வளத்தை கொண்டு மதிப்பிடும் தண்ணீர் பொருளாதாரம் இது. இதை கண்டுபிடித்தவர் இங்கிலாந்தை சேர்ந்த பொருளாதார வல்லுநர் ஜான் ஆண்டனி ஆலன். இந்த கண்டுபிடிப்புக்காக ‘ஸ்டாக்ஹோம் வாட்டர் -2008’ விருது பெற்றவர்.

ஒரு பொருளுக்குள் மறைந்திருக்கும் கண்ணுக்கு தெரியாத நீர் - இதுவே மறை நீர். இது ஒரு தத்துவம், பொருளாதாரம். ஒரு மெட்ரிக் டன் கோதுமை 1,600 கியூபிக் மீட்டர் தண்ணீருக்கு சமம் என்கிறது மறைநீர் தத்துவம். மறை நீர் என்பதற்கு ஆலன் தரும் விளக்கம், “கோதுமை தானியத்தை விளைவிக்க நீர் தேவை. ஆனால், அது விளைந்தவுடன் அதை உருவாக்கப் பயன்பட்ட நீர் அதில் இல்லை. ஆனால், அந்த நீர், கோதுமை தானியங்களுக்காகத்தானே செலவிடப்பட்டிருக்கிறது அல்லது மறைந்திருக்கிறது. இதுவே மறை நீர். கோதுமை தேவை அதிகம் இருக்கும் ஒரு நாடு, ஒரு மெட்ரிக் டன் கோதுமையை இறக்குமதி செய்யும்போது, அந்த நாடு 1,600 கியூபிக் மீட்டர் அளவுக்குத் தனது நாட்டின் நீரைச் சேமித்துக்கொள்கிறது'' என்கிறார் ஆலன்.

புத்திசாலி நாடுகள்!

நீரின் தேவையையும் பொருளின் தேவையையும் துல்லியமாக ஆய்வுசெய்து அதற்கு ஏற்ப உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுக்க வேண்டும். சீனா, இஸ்ரேல் மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் அப்படித்தான் செய்கின்றன. சீனாவின் பிரதான உணவு பன்றி இறைச்சி. ஒரு கிலோ பன்றி இறைச்சி உற்பத்திக்கான மறை நீர் தேவை 5,988 லிட்டர். அதனால், சீனாவில் பன்றி உற்பத்திக்கு கெடுபிடி அதிகம். ஆனால், தாராளமாக இறக்குமதி செய்துகொள்ளலாம். ஒரு கிலோ ஆரஞ்சுக்கான மறை நீர் தேவை 560 லிட்டர். சொட்டு நீர் பாசனத்தில் கோலோச்சும் இஸ்ரேலில் ஆரஞ்சு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு கெடுபிடிகள் அதிகம். இவ்விரு நாடுகளும் ஒவ்வொரு பொருளுக்குமான மறை நீர் தேவையைத் துல்லியமாகக் கணக்கிட்டு அதன்படி ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகளை வகுத்துள்ளன.

இது இந்திய நிலவரம்!

முட்டை உற்பத்தியில் இந்தியாவில் முதலிடம் வகிக்கிறது மகாராஷ்டிரம். நாமக்கல்லுக்கு இரண்டாவது இடம். நாமக்கல்லில் ஒரு நாளைக்கு மூன்று கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதில் 70 லட்சம் முட்டைகள் தினசரி வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. இதன் மூலம் ஆண்டுக்கு 4.80 கோடி டாலர்கள் அன்னிய செலவாணி கிடைக்கிறது.

மூன்று ரூபாய் முட்டைக்கு 196 லிட்டர் மறை நீர்

வளைகுடா மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் தண்ணீர் பற்றாக்குறை கொண்டவை. ஐரோப்பிய நாடுகள் மறைநீர் தத்துவத்தைப் பின்பற்றுபவை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். சரி, சராசரியாக 60 கிராம் கொண்ட ஒரு முட்டையை உற்பத்தி செய்ய 196 லிட்டர் மறை நீர் தேவை. மூன்று ரூபாய் முட்டை 196 லிட்டர் தண்ணீரின் குறைந்தபட்ச விலைக்குச் சமம் என்பது எந்த ஊர் நியாயம்?முட்டையினுள் இருக்கும் ஒரு கிராம் புரோட்டீனுக்கு 29 லிட்டர் மறை நீர் தேவை. ஒரு கிலோ பிராய்லர் கோழிக் கறி உற்பத்திக்கான மறை நீர் தேவை 4325 லிட்டர்.

சென்னை கதைக்கு வருவோம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு ஆண்டுக்கு லட்சக்கணக்கான கார்களைத் தயாரித்து அவர்கள் நாடு உட்பட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. ஏன்? அவர்களின் நாடுகளில் அவற்றை உற்பத்தி செய்ய முடியாதா? இடம்தான் இல்லையா? உண்டு. இங்கு மனித சக்திக்கு குறைந்த செலவு என்றால், நீர்வளத்துக்கு செலவே இல்லை. 1.1 டன் எடை கொண்ட ஒரு கார் உற்பத்திக்கான மறை நீர் தேவை நான்கு லட்சம் லிட்டர்கள்.

இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் தோல் பொருட்களில் 72 % வேலூர் மாவட்டத்தில் இருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் 2013-14-ம் ஆண்டில் தோல் பொருட்கள் ஏற்றுமதிக்கு 850 கோடி டாலருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 5,500 கோடி ரூபாய்க்கு தோல் பொருட்கள் ஏற்றுமதியாகின்றன.

அன்னிய செலவாணி வருவாய் ஆண்டுக்கு சுமார் 10,000 கோடி ரூபாய். ஒரு எருமை அல்லது மாட்டின் ஆயுள்கால மறை நீர் தேவை 18,90,000 லிட்டர். 250 கிலோ கொண்ட அக்கால்நடையில் இருந்து ஆறு கிலோ தோல் கிடைக்கும்.

ஒரு கிலோ தோலை பதனிட்டு அதனை செருப்பாகவோ கைப்பையாகவோ தயாரிக்க 17,000 லிட்டர் மறை நீர் தேவை.

பனியன், ஜட்டி உற்பத்தியில் முதலிடம் திருப்பூருக்கு. ராக்கெட் தயாரிக்கும் வல்லரசுகளுக்கு ஜட்டி தயாரிக்க தெரியாதா? 250 கிராம் பருத்தி உற்பத்திக்கான மறை நீர் தேவை 2495 லிட்டர்கள். ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க 10,000 லிட்டர் மறை நீர் தேவை.

தண்ணீருக்கு எங்கு கணக்கு?

ஒரு பொருளின் விலை என்பது அதன் எல்லா செலவுகளையும் உள்ளடக்கியதுதானே? அப்படி எனில், பெரும் நிறுவனங்கள் எல்லாம் தண்ணீருக்கு மட்டும் ஏன் அதன் விலையை செலவுக் கணக்கில் சேர்ப்பது இல்லை. ஏனெனில், நம்மிடம் இருந்து இலவசமாகத் தண்ணீரைச் சுரண்டி நமக்கே கொள்ளை விலையில் பொருட்களை விற்கின்றன அந்நிறுவனங்கள்.

இப்படி எல்லாம் முட்டையில் தொடங்கி கார் வரைக்கும் கணக்கு பார்த்தால் நாட்டின் வளர்ச்சி என்னவாவது? நாம் என்ன கற்காலத்திலா இருக்கிறோம் என்கிற கேள்விகள் எழாமல் இல்லை. கண்ணை மூடிக்கொண்டு பொத்தாம்பொதுவாய் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது மறை நீர் பொருளாதாரம்.

மறை நீருக்கு மதிப்பு கொடுத்திருந்தால் உலகின் பணக்காரர்களிடம் பட்டியலில் என்றோ இடம் பிடித்திருப்பான் இந்திய விவசாயி. இனியாவது இந்திய அரசு மறை நீர் தத்துவத்தை உணர வேண்டும்.

நாம் அனைவரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு இது.
உங்களின் அனைத்து குழுக்களுக்கும் பகிர்வு செய்யுங்கள்.

No comments:

Post a Comment