எமது உழைப்பைத் திருடி விற்கும் பேஸ்புக்கிடம் கூலி கேட்போம்

பலருக்கு இதைக் கேட்கும் பொழுது சிரிப்பு வரலாம். ஆனால், ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். ஏன் பேஸ்புக் நிறுவனம், அதைப் பாவிக்கும் எமக்கு கூலியாக பணம் கொடுக்கக் கூடாது? தமிழில் முகநூல் என்று அழைக்கப்படும், பேஸ்புக் பாவனையாளர்கள், சில விடயங்களை அவதானித்திருப்பார்கள். விளம்பரங்களுக்கு என ஒதுக்கப்படும் இடம் அதிகரிக்கப் பட்டுள்ளது. எமக்கான பக்கத்தில் கூட விளம்பரங்கள் வருகின்றன. எமது அஞ்சல் பெட்டிக்குள் நாம் கேட்காமலே விளம்பரங்கள் வந்து குவிகின்றன. அதே நேரம், பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியிலும் ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றது. உண்மையில், பேஸ்புக் நிறுவனம் அதைப் பாவிக்கும் எங்கள் எல்லோருக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகின்றது.

கடந்த வருடத்தில் இருந்து முகநூலில், யார் வேண்டுமானாலும் பணம் கொடுத்து தனது தகவலை எல்லோருடைய கணக்கிலும் தெரியச் செய்ய முடியும். ஒரு தகவலை பிரசுரிப்பவர், அதற்காக குறிப்பிட்ட தொகை பணம் கொடுத்தால் போதும். இது பல வர்த்தக நிறுவனங்களை பெரிதும் கவர்ந்துள்ளது. தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகளும் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கின்றனர். இந்தப் புதிய ஏற்பாடு, பேஸ்புக் போன்ற சமூக வலைத் தளங்கள் தோன்றிய நோக்கத்தை சிதைக்கின்றது. பேஸ்புக் பாவனையாளர்கள் மத்தியிலான போலி சமத்துவம் மறைந்து, அந்த இடத்தில் பணக்காரர், ஏழைகள் என்ற ஏற்றத் தாழ்வு உண்டாகின்றது.

நிச்சயமாக, பேஸ்புக் நிறுவனம் சமூக சேவைக்கான தொண்டு நிறுவனம் அல்ல. தொடக்கத்தில் இருந்தே இலாபம் சம்பாதிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. பாவனையாளர்களான நாங்கள், பேஸ்புக்கில் பிரசுரிக்கும் ஒவ்வொரு தகவலும், தரவேற்றும் ஒவ்வொரு நிழற்படமும், பேஸ்புக் நிறுவனத்தின் சொத்துக்களாக மாறி விடுகின்றன. நாம் எமது கணக்கை இரத்து செய்து விட்டு சென்றாலும், அந்த தகவல்கள் யாவும் பேஸ்புக்கில் தொடர்ந்தும் சேமித்து வைத்திருக்கப் படும். அதாவது, எமது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய தகவல்கள், பேஸ்புக்கில் பகிரங்கமாக வைக்கப் படுவதல்ல இங்கேயுள்ள பிரச்சினை. அது நமது விருப்பத்திற்கு மாறாக, ஒரு விற்பனைப் பண்டமாக மாற்றமடைகின்றது. ஒரு விற்பனைப் பண்டம் வைத்திருப்பவர், அதை விற்று இலாபம் சம்பாதிக்க முடியும்.

தற்போது உலகம் முழுவதும் உள்ள பேஸ்புக் பாவனையாளர்களின் எண்ணிக்கை ஒரு பில்லியனை தாண்டி வருகிறதுஅவர்கள் அனைவரும் பிரசுரித்த பல கோடிக் கணக்கான தகவல்களை, பேஸ்புக் நிறுவனம் கையகப் படுத்தி வைத்திருக்கிறது. பேஸ்புக் ஒரு நாடு என்று நினைத்துக் கொண்டால், அது தான் இன்று உலகில் சனத்தொகை கூடிய இரண்டாவது பெரிய நாடாக இருக்கும். ஒரு பில்லியன் பேஸ்புக் பிரஜைகள், இருபது நிமிடங்களுக்குள் ஒரு மில்லியன் இணைப்புகள், ஒரு மில்லியன் தகவல்களை அனுப்புகிறார்கள். இரண்டு மில்லியன் நண்பர்களை சேர்த்துக் கொள்கிறார்கள்

இந்தப் புள்ளி விபரமானது, பேஸ்புக் வலையமைப்பு எந்தளவு விரிவானது என்பதை மட்டும் காட்டவில்லை. பேஸ்புக் நிறுவனத்தின் மொத்தப் பெறுமதி என்னவென்று கணிப்பிடவும் உதவுகின்றது. இந்த நிமிடத்தில், பேஸ்புக் நிறுவனத்தின் மொத்த மதிப்பு 140 பில்லியன் டாலர்கள். இது சில நேரம், மிகைப் படுத்தப் பட்ட தொகையாக இருக்கலாம். ஆனால், கடந்த வருடம் பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கெர்பெர்க், ஒரு நாளைக்கு 6 மில்லியன் டாலர்கள் சம்பாதிப்பதை தடுத்து நிறுத்தவில்லை.

பேஸ்புக் நிறுவனத்தின் இலாப விகிதம் வருடாந்தம் அதிகரித்துக் கொண்டிருப்பதால், அதற்கு எதிரான எதிர்ப்புக் குரல்களும் அதிகரித்து வருகின்றன. அமெரிக்காவில், நியூ யார்க் நகரை சேர்ந்த,Laurel Ptak என்ற ஆய்வாளர், அனல் பறக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் மையக் கரு: "பேஸ்புக் அதனது பாவனையாளர்களுக்கு கூலியாக பணம் கொடுக்க வேண்டும்." அறிக்கையின் தொடக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்: "பேஸ்புக் பயன்படுத்துவதுநட்பு அடிப்படையிலான செயல் என்று அவர்கள் கூறுகின்றார்கள். நாங்கள் இதனை கூலி கொடுக்கப் படாத இலவச உழைப்பு என்று சொல்கிறோம். "லைக்", "குறுஞ் செய்தி", "இணைப்பு" போன்ற ஒவ்வொன்றும் அவர்களுக்கு இலாபமாக மாறுகின்றது. நாங்கள் எமது தகவல்களை மற்றவர்களுடன் "பகிர்ந்து கொள்கிறோம்" என்று அவர்கள் கூறுகின்றனர். நாங்கள் அதனை "தகவல் திருட்டு" என்று அழைக்கின்றோம்."

Laurel Ptak கூறுவதன் படி, நாம் பேஸ்புக்கில் பிரசுரிக்கும் ஒவ்வொரு தகவலும் எமது உழைப்பில் இருந்தே உருவாகின்றது. அதற்காக நாம் நேரத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, ஆக்கபூர்வமான ஒன்றை செய்கின்றோம். நிச்சயமாக, அதுவும் ஒரு உழைப்பு தான். ஆனால், விலை தீர்மானிக்கப் படாத உழைப்பு, உபரி மதிப்பாக சேமித்து வைக்கப் படுகின்றது. நியாயமாகப் பார்த்தால், எமக்குச் சேர வேண்டிய, எம்முடைய உழைப்பின் உபரி மதிப்பு, இன்னொருவரால் பணமாக மாற்றிக் கொள்ளப் படுகின்றது. இதைத் தான் திருட்டு என்று சொல்கிறோம்

உதாரணத்திற்கு, பேஸ்புக் ஒரு புத்தகம் என்று நினைத்துக் கொள்ளுங்கள். பல்லாயிரம் நபர்கள் சேர்ந்து எழுதிய ஒரு புத்தகம் அது. பலரின் கூட்டு உழைப்பால் உருவான புத்தகம் விற்று வரும் ராயல்ட்டி தொகையை, ஒரு சிறிய குழுவினர் சொந்தமாக்கிக் கொள்கின்றனர். இந்தப் பகற் கொள்ளையை தடுக்க வேண்டுமானால், பாவனையாளர்கள் அரசியல் மயப் படுத்தப் பட வேண்டும். நாங்கள் ஒரு வர்த்தக நிறுவனத்திற்கு இலவசமாக வேலை செய்கிறோம் என்ற உணர்வு, பாவனையாளர்கள் மத்தியில் உருவாக வேண்டும். பாவனையாளர்களும் பேஸ்புக் நிறுவனத்திற்கு கிடைக்கும் இலாபத்தில் பங்கு கேட்க வேண்டும்.

பேஸ்புக் நிறுவனம் இதைக் கேட்டு விட்டு, நாளைக்கே எங்கள் எல்லோருக்கும் பணம் கொடுக்க ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. சமூக வலையமைப்பில் ஏகபோக உரிமை கொண்டாடும் அவர்கள், இதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பார்கள். ஆனால், உழைப்பவர்கள் ஊதியம் கேட்க முடியும் என்ற நியாயமான கோரிக்கை ஒரு இணையப் புரட்சிக்கு வித்திட முடியும். அதுவே பேஸ்புக் நிறுவனத்தின் பலவீனமும் ஆகும். ஏனெனில், பாவனையாளர்கள் இன்றி பேஸ்புக் இயங்க முடியாது. அதனால் தான் பாவனையாளர்கள் அரசியல் மயப் படுத்தப் பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறோம். "உழைப்பு என்றால் என்ன? உபரி மதிப்பு எவ்வாறு உருவாகின்றது?" போன்ற அறிவைப் பெற வேண்டும்.

Laurel Ptak வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை பேஸ்புக் நிறுவனம் பற்றியது தான். ஆனால், பாவனையாளர்களின் உழைப்பில் இருந்து பெறப் படும் உபரி மதிப்பை விற்றுக் காசாக்கும் வேறு சில இணைய நிறுவனங்களும் உள்ளன. கூகிள், டிவிட்டர், யாகூ போன்ற சிலவற்றைக் குறிப்பிடலாம். இது பற்றிய விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பரவும் நேரம், அது இணையப் புரட்சியை மட்டுமல்லாது, சமூகப் புரட்சியையும் உருவாக்கும். ஏனெனில், இது போன்று மகளின் இலவச உழைப்பை திருடிச் சம்பாதிக்கும் பல நிறுவனங்கள் சமூகத்தில் உள்ளன

முதலில் நாங்கள் உழைப்பு, வேலை போன்ற சொற்களுக்கு அர்த்தம் என்னவென்று அறிந்து கொள்வோம். அதற்குப் பிறகு, புதிய நண்பர்களை உருவாக்கி, எமது நட்பு வட்டத்தை விரிவு படுத்திக் கொள்வோம்.

No comments:

Post a Comment