பத்திரப்பதிவுக்கு அதிரடி கட்டுப்பாடுகள்: நிலமோசடியை தடுக்க நடவடிக்கை

சொந்தமாக ஒரு இடம் வாங்க வேண்டுமென்றால் இன்று பலமுறை யோசிக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே விற்பனை செய்யப்பட்ட நிலத்தை போலி ஆவணங்கள் தயாரித்து மீண்டும் விற்பனை செய்வது, ஆள்மாறாட்டம் மூலம் போலியான புகைப்படங்களை ஒட்டி மோசடி செய்வது... என நில விற்பனையின் போது ஏராளமான மோசடிச் சம்பவங்களும் அரங்கேறுவதை காணமுடிகிறது.  

அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் நில மோசடி, நில அபகரிப்பு வழக்குகள் போடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க போலீசார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 

மாவட்டங்கள்தோறும் நில மோசடியை விசாரிப்பதற்கென்றே தனி போலீஸ் படையும் உருவாக்கப்பட்டது. நில விற்பனையின் போது பவர் என்ற வார்த்தை இன்று அதிகம் பயன்படுத்தப்படுவதை பார்க்கலாம். 

தனக்கு சொந்தமான நிலத்தை ஒருவர் விற்பனை செய்ய நினைக்கிறார். ஆனால் அலைந்து திரிந்து ஆட்களை பிடித்து நிலம் விற்பனை செய்ய அவரது உடல் நிலை ஒத்துழைக்காத பட்சத்திலோ... அல்லது அவர் வெளிநாட்டில் இருந்தாலோ அவருக்கு பதிலாக குறிப்பிட்ட நிலத்தை வேறு ஒருவர் விற்றுக் கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டதுதான் பவர் என்று அழைக்கப்படும் பொது அதிகாரம். 

இதன்படி பவர் பெறுபவர் அந்த நிலத்துக்கு முழு அதிகாரம் படைத்தவராக மாறுகிறார். அதே நேரத்தில் இந்த பவரை எப்போதும் வேண்டுமானாலும் நிலத்துக்கு சொந்தக்காரர் ரத்து செய்வதற்கும் சட்டத்தில் இடமுள்ளது. இவை எல்லாமே பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூலம் முறைப்படுத்தப்பட்டு வருகிறது. 

இப்படி பவர் வாங்குபவரிடம் நில உரிமையாளர் குறிப்பிட்ட விலையை சொல்லி இவ்வளவு ரூபாய்க்கு விற்றுக் கொடுத்தால்போதும் என்று கூறியிருப்பார். இதுவே பவர் வாங்குபவருக்கு இதுநாள் வரை சாதகமாக இருந்தது. 

ஆனால் இதனை பயன்படுத்தி பவர் வாங்கியவர், தன் இஷ்டத்துக்கு ஒரு விலை வைத்து குறிப்பிட்ட நிலத்தை விற்பனை செய்து லாபம் பார்த்து விடுவார். பவர் வாங்குபவர், கொடுப்பவர் 2 பேருமே உயிருடன் இருக்கும் வரைதான் பவருக்கும் உயிர். இதில் ஒருவர் உயிரிழந்து விட்டாலும் பவரும் செத்துப் போய்விடும் என்பார்கள். ஆனால் சில நேரங்களில் பவர் கொடுத்தவர் இறந்த பின்னரும் பறிபோன அதிகாரத்தை பயன்படுத்தி மோசடியாக நில விற்பனை நடைபெற்று வருகிறது. 

இப்படி நிலம் வாங்கி ஏமாறுபவர்கள் அப்பிரச்சினையில் இருந்து மீண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இப்படி நடைபெறும் நில மோசடியை தடுப்பதற்காக பத்திர பதிவின்போது அதிரடியாக புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. 

பவர் வாங்கி நிலத்தை விற்பனை செய்யும் நேரங்களில் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு நிலத்தின் உரிமையாளர் வரத்தேவையில்லை என்ற நிலை இருந்தது. பவர் வாங்கிய நபரே, இன்னாருக்கு இந்த இடத்தை விற்பனை செய்கிறேன் என்று எழுதி கையெழுத்து போட்டால் போதும். வேலை முடிந்து விடும். 

ஆனால் புதிய கட்டுப்பாட்டின்படி நிலத்தின் உரிமையாளர் வரவேண்டும். இல்லையென்றால் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரால் வரமுடியவில்லை என்ற அரசு டாக்டரின் சான்றிதழ் கட்டாயம் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பவர் வாங்கி நிலம் விற்பனை செய்பவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் இதனை வரவேற்கும் நேரத்தில் நடைமுறை சிக்கல்களும் இருப்பதாக கூறுகிறார்கள். 

இதுபற்றி அகில இந்திய ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் நல சங்க தலைவர் வசந்த குமார், மாநில பொதுச்செயலாளர் அன்புமணி ஆகியோர் கூறியதாவது, 

புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வரவேற்கப்பட வேண்டியதுதான். அதே நேரத்தில் நிலத்தின் உரிமையாளருக்கு மருத்துவ சான்றிதழ் கட்டாயம் வாங்க வேண்டும் என்று அறிவித்திருப்பது நடைமுறையில் சில சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது. 

நீங்கள் தான் கூடுதல் விலைக்கு நிலத்தை விற்கப் போகிறீர்களே, எனது மருத்துவ சான்றிதழ் இருந்தால்தான் அதனை விற்பனை செய்ய முடியும். எனவே பேசிய தொகையைவிட கூடுதலாக கொஞ்சம் கொடுங்கள் என்று நில உரிமையாளர் பவர் வாங்கியவரிடம் கேட்பதற்கும் வாய்ப்பு உள்ளது. 

அதே நேரத்தில் கமிஷன் கொடுத்துதான் டாக்டர் சான்றிதழும் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பலர் வாங்கி இருப்பவர்களுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 

இவ்வாறு அவர்கள் கூறினர். 

புதிய நடைமுறைகள் வரும்போது எதிர்ப்புகள் கிளம்புவது சகஜம்தான் போகப்போக அது சரியாகி விடும் என்று கூறுகிறார். பத்திர பதிவுத்துறை அதிகாரி ஒருவர். எது எப்படியோ.. நில மோடிகள் தடுக்கப்பட்டால் சரிதான்!